my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வியாழன், 1 செப்டம்பர், 2011

ஓஷோ பேசுகிறார் – 2


அன்பு எப்போதும் உங்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும். காரணம் நமது வளர்ப்பு முறை. நமக்கு வெறுப்பை உமிழச் சொல்லித்தந்தார்களே தவிர, அன்பைக் காட்டச் சொல்லித் தரவில்லை. நமக்கு உருவேற்றப்பட்ட மனக்கட்டுத்திட்டங்கள் அன்புக்கு எதிரானவை. ஆனால் அவர்களின் சூழ்ச்சி மிகவும் நுட்பமானது. ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த சூழ்ச்சி புரியும். நமக்கு வெறுப்பைக் காட்டத்தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம்.
இந்து முகமதியனை வெறுக்கிறான். முகமதியன் கிறிஸ்துவனை வெறுக்கிறான். கிறிஸ்துவனோ யூதனை வெறுக்கிறான். ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை வெறுக்கிறது. ஆத்திகன் நாத்திகனை வெறுக்கிறான். நாத்திகன் ஆத்திகனை வெறுக்கிறான். அரசியல் கொள்கைகள் எல்லாம் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.
கம்யூனிஸ்டுகள் ஃபாசிஸ்டுகளை வெறுக்கிறார்கள். ஃபாசிஸ்டுகள் சோஷலிசவாதிகளை எதிர்க்கிறார்கள். எல்லா நாடுகளும் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை வெறுக்கிறது. உலகம் முழுவதும் வெறுப்பு நிறைந்திருக்கிறது.
உங்கள் இரத்தம், உங்கள் எலும்பு, அதனுள் இருக்கும் மஜ்ஜை வரையில் இந்த வெறுப்பு பரவியிருக்கிறது. சில நேரங்களில் நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் எதையாவது எதிர்த்துத்தான் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்று சேர்வார்கள். நமது ஒற்றுமைக்குக்கூட ஒரு பொது எதிரி தேவை. ஆதனால் அந்தச் சேர்க்கை அன்பில் அடிப்படையில் விளைந்தது அல்ல. ஒரு பொது எதிரியின் மேல் உள்ள வெறுப்பின் அடிப்படையில் விளைந்தது.
இந்த மனோதத்துவம் ஹிட்லருக்கு நன்றாகத் தெரியும். அவன் தனது சுயசரிதையில் எழுதுகிறான்… ‘அன்பால் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதில்லை. அன்புக்கு அந்தச் சக்தி கிடையாது. வெறுப்புணர்வுதான் சக்தி மிக்கது. வெறுப்பை உண்டாக்குங்கள் மக்கள் ஒன்று சேர்வார்கள்.என்னால் ஹிட்லரின் அறிவைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவன் பைத்தியக்காரனாக இருந்திருக்கலாம். சில சமயம் பைத்தியக்காரர்களுக்கு அதீதமான உட்பார்வை இருப்பதுண்டு. ஒரு கூட்டத்தின் மனப்பாங்கு எப்படி இருக்கும் என்பதை ஹிட்லர் புட்டுப் புட்டு வைத்துவிட்டான்
முகமதியர்கள் தாக்குவார்கள் என்ற பயம் இருந்தால் இந்துக்கள் ஒன்று சேர்வார்கள். இந்துக்கள் மேல் பயம் இருந்தால்தான் முகமதியர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். பாகிஸ்தான் படையெடுக்கப் போகிறது என்று செய்தி வந்தால்தான் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.
அந்தக் காலத்தில் ரஷியா அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் செய்து குவித்துக் கொண்டிருந்தது. காரணம் அமெரிக்கா தன்னைத் தாக்குமோ என்ற பயம்தான். அதே போல், ரஷ்யாவின் மேல் ஏற்பட்ட பயத்தால் அமெரிக்கா அழிவு ஆயுதங்களை சேகரித்துக் கொண்டிருந்தது. மொத்த உலகமே பயத்திலும், வெறுப்பிலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அன்பை ஒத்துமொத்தமாக அழித்துவிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக, பல ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் அன்பில் விஷத்தைச் செலுத்திவிட்டார்கள். அதனைச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள். அதனால் எப்போதெல்லாம் உங்கள் மனதில் அன்பு தோன்றுகிறதோ அப்போது உங்களிடம் உள்ள மனக்கட்டுத்திட்டம் அதனை மூர்க்கமாக எதிர்க்கிறது.
மனிதனுக்கு ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். அன்புதான் மனிதனின் அடிப்படைக் குணம். அன்பில்லாமல் யாரும் வளர முடியாது, மலர முடியாது, நிறைவு காண முடியாது, திருப்தியுடன் வாழ முடியாது. அன்பில்லாமல் கடவுளே இல்லை. அன்பின் அனுபவத்தின் உச்சக்கட்டம்தான் கடவுள்.
உங்கள் அன்பு போலியாக இருப்பதால் உங்களால் போலியான அன்பைத்தான் சமாளிக்க முடியும் என்பதால் உங்கள் கடவுளும் ஒரு போலிதான்.
கிறிஸ்துவர்களின் கடவுள், இந்துக்களின் கடவுள், யூதர்களின் கடவுள் எல்லாருமே போலிகள் தான்.
கடவுள் எப்படி இந்துவாக, கிறிஸ்துவாக, முகமதியராக, யூதராக இருக்க முடியும்? அன்புக்கு மதச்சாயம் பூச முடியுமா? அன்பிலே இந்து-அன்பு, முகமதிய-அன்பு, யூத-அன்பு, கிறிஸ்துவ-அன்பு என்ற பாகுபாடுகள் இருக்க முடியுமா என்ன? இந்த பூமியே ஒரு பெரிய திறந்த வெளி பைத்தியக்கார ஆஸ்பத்திரியைப் போல் செயல்படுகிறது.
எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ‘எனக்கு பயமே வரக்கூடாதுஎன்று நீங்கள் நினைத்தால் இந்த பொம்மைகளையும் போலிகளையும் வைத்துக் கொண்டு காலம் முழுவதும் விளையாடிக் கொண்டிருங்கள். மெய்யான அன்பும், மெய்யான கடவுளும் உங்களுக்குரியன அல்ல.
ஆனால் நீங்கள் இங்கே என்னிடம் வரும் போது இந்த பொம்மைகளையும், போலிகளையும் தூக்கியெறிய வேண்டும். என்னுடைய வேலையே இதுதான். எல்லா பொம்மைகளையும் அழிப்பது. நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள் என்பதை உங்களுக்கு உணரவைப்பது. உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. இன்னும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பது. வளர்ந்தபின் குழந்தைக்குறிய அறிவுடன் செயல்படுவதைப் போன்ற அசிங்கம் வேறு எதுவும் இல்லை. குழந்தைப் போல் வெகுளித்தனமாக இருப்பது என்பது வேறு. குழந்தையைப் போல் பக்குவமில்லாமல், குழந்தை-அறிவுடன் இருப்பது என்பது வேறு. முன்னது ஒரு வரப்பிரசாதம். பின்னது ஓர் ஊனம். முப்பது வயதில் நீங்கள் காகிதக் கப்பலுடனும், யானைப் பொம்மையுடனும் விளையாடிக் கொண்டிருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்?
மிகவும் அழகான பிரபஞ்ச இருப்பு நிலை உங்களை நாலாபக்கங்களிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த அழகு உங்களை இருந்த இடத்திலேயே நடனம் ஆட வைக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நீங்கள் இறந்தவருக்குச் சமமாகி விடுவீர்கள். நீங்கள் ஏற்கனவே இறந்திருக்க வேண்டும். கல்லறையில் இருக்க வேண்டிய ஆசாமி. தவறுதலாக வெளியே இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

ஓஷோ பேசுகிறார் – 1


தெய்வீக நிலையோடு இரண்டறக் கலந்து விடும்படியானதோர் தெய்வீகம் வேண்டுமென்றால் முதலாவதாக உங்களுக்குள் இருக்கும் நான்இறக்க வேண்டும். இதுதான்தாவோவின் உள்நோக்கு. தாவோ என்பது கடவுளின் இன்னொரு பெயர். அவ்வளவுதான்.
தாவோ என்ற பெயர் அழகாக இருக்கிறது. கடவுள் என்ற பெயரை , அந்த வார்த்தையை, நமது பூசாரிகளும், பாதிரிகளும், மாசுபடுத்திவிட்டார்கள். கடவுளின் பெயரால் காலம் கலமாக மக்களைச் சுரண்டிக்கொண்டிருந்து விட்டார்கள். இவர்களுடைய சுரண்டலால், இவர்களுடைய பித்தலாட்டங்களால் இப்போது கடவுள் என்ற வார்த்தையே அசிங்கமாகப் போய்விட்டது.
அறிவுள்ள எந்த மனிதனும் கடவுள் என்ற வார்த்தையின் பக்கம் தலைவைத்துப் படுக்கவே பயப்படுகிறான். கடவுளின் பெயரால் பல நூற்றாண்டுகளாக நடந்த அநியாயங்களை, கொலைகளை, கொள்ளைகளை, கற்பழிப்புகளை அந்த வார்த்தை நினைவுபடுத்துகிறது. அதனால் கூடிய மட்டில் அந்த வார்த்தையைப் பிரயோகிப்பதையே தவிர்த்துவிடுகிறான் அவன்.
உலகிலேயே மிகவும் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை கடவுள்தான். வேறு எந்த வார்த்தையையும் விட, இந்த வார்த்தையின் பெயரால் தான் அதிகபட்ச கொடுமைகள் நடந்திருக்கின்றன.
அதனால் , தாவோ என்ற வார்த்தை மிக அழகாகத் தோன்றுகிறது. உங்களால் தாவோவை வழிபட முடியாது. ஏனென்றால் தாவோ எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தாவோ என்றால் ஒரு மனித உருவத்தின் நினைவு வருவதில்லை. தாவோ ஓர் ஆள் இல்லை, அது ஓர் ஆதார விதி. நீங்கள் கடவுளை வணங்கலாம். ஆதார விதியை வணங்க முடியாது. அது மடத்தனமாக, கேலிக்கூத்தாக இருக்கும்.
நீங்கள் புவியீர்ப்பு விதியை வணங்குவீர்களா? இல்லை, விஞ்ஞானி ஐன்ஸ்டின் வரையறுத்த சார்பியல் கோட்பாட்டுக்கு கற்பூரம் காட்டுவீர்களா? அது அபத்தமாக இருக்கும்.
தாவோ என்பது ஒட்டுமொத்த பிரஞ்ச இருப்பையும் இணைக்கும் ஆதார விதி. இந்த பிரபஞ்சம் என்பது தற்செயலாக நடந்த ஒரு விபத்தில்லை. அது தான்தோன்றித்தனமான குழப்பமும் இல்லை. அண்டங்களின் படைப்புக் கோட்பாட்டின்படி உருவான ஓர் ஒழுங்குமுறைதான் இந்த பிரபஞ்சம்.
விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தைப் பாருங்கள். அதில் அதீத ஒழுங்கு தெரிகிறதல்லவா? பூமி சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில், ஒரு குறிப்பிட்ட வேகத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுகிறது. மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. நமது சூரிய மண்டலமே ஒட்டுமொத்தமாக சுழன்று கொண்டிருக்கிறது. எதைப் பார்த்தாலும் அதில் ஓர் அதீத ஒழுங்கு உள்ளீடாக மிளிர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த ஒழுங்குதான் தாவோ. முழுமையின் இசைவுதான் தாவோ.
நல்ல வேளை, இதுவரை யாரும் தாவோவிற்காக கோயில்கள் கட்டவில்லை. சிலைகள் வைக்கவில்லை. பூஜை புனஸ்காரங்கள் செய்யவில்லை. பூசாரிகள் இல்லை. வேறு எந்த இடைத்தரகர்களும் இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் இல்லை. அதுதான் தாவோவின் அழகு.
அதனால்தான் தாவோவை ஒரு கொள்கை என்றோ கோட்பாடு என்றோ நான் சொல்லவில்லை. அதை மதம் என்றுகூட நான் சொல்லவில்லை. அதைத் தர்மம் என்று அழைக்கலாம். தர்மம் என்றால் தாங்கி நிற்பது என்று பொருள். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதுதான் தர்மம். இந்தப் பொருளில்தான் நான் தாவோவை தர்மம் என்கிறேன். புத்தர் தாவோவை தர்மம் என்றுதான் சொன்னார். நல்ல தமிழில் இயற்கை என்ற வார்த்தை தாவோவை ஒட்டி வருகிறது.
*
மக்கள் ஏன் கடவுளைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் நினைக்கிறார்கள்? எல்லாம் பயம் காரணமாகத்தான். அவர்களுக்கு கடவுளை, சொர்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அதிகாரம், அந்தஸ்து, செல்வம், சுகம், இவ்வளவுதான். அவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். அந்த பயம் காரணமாக, பேராசை காரணமாகத்தான் கடவுளை வழிப்படுகிறார்கள். ஆனால் ஆசையின் அடிப்படையில், அச்சத்தின் அடிப்படையில் செய்யப்படும் இறைவழிபாடு, வழிபாடேயில்லை.
உண்மையின் வழிபாடு , மனதில் பொங்கிப் பீறிட்டு எழும் நன்றி உணர்வால் ஏற்படுகிறது. பயத்தாலும், பேராசையாலும் அது எப்போதும் ஏற்படுவதில்லை. உண்மையின் வழிபாடு உண்மைமேல் உள்ள காதலால் ஏற்படுகிறது. அப்படிக் காதலிக்கப்படும் உண்மை எதுவாக இருந்தாலும் சரி, அதுதான் உண்மையான வழிபாட்டுக்கு வித்து. அப்படியில்லாவிட்டால் உங்களுடைய இந்த உலக ஆசைகளை நீங்கள் சொர்க்கத்தின் மேல் திணிப்பீர்கள். கடவுளின் மேல் திணிப்பீர்கள்.
பல நாடுகளில் உள்ள பல்வேறு மதங்கள் எப்படி சொர்க்கத்தை வர்ணிக்கின்றன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் தங்கள் ஆசைகளை சொர்க்கத்தில் புறநிலைப் படுத்துகிறார்கள்.
உதாரணமாக திபெத் நாட்டில் உள்ள மதத்தில் சொர்க்கம் ஒரு கதகதப்பான பிரதேசமாக வர்ணிக்கப்படுகிறத. காரணம், திபெத் ஒரு குளிர்பிரதேசம். ஆகையால் அவர்கள் தங்கள் சொர்க்கத்தில் வெயில் கொளுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் அவர்களால் தினம் ஒரு முறை குளிக்க முடியும். திபெத்தில் உள்ள மதநூல்களும் சாத்திரங்களும், வருடத்திற்கு ஒரு முறை குளித்தால் போதும் என்று சொல்கின்றன.
இந்தியர்கள் வர்ணிக்கும் சொர்க்கம் குளிர்ச்சியானது. அது குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. ஏசி என்று ஒன்று வரும் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது.
அதனால் அங்கு எப்போதும் குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கும் என்று சொன்னார்கள். ஏனென்றால் இந்தியா ஓர் உஷ்ணப் பிரதேசம். வருடம் முழுவதும் வெயில் கடுமையாக இருப்பதால் இந்திய மனம் எப்போதும் நிழலையும், குளிர்ச்சியையும் தேடி அலைகிறது.
அதனால் அவர்கள் சொர்க்கத்தில் எப்போதும் தென்றல் காற்று வீசிக் கொண்டேயிருக்கும், பெரிய பெரிய மரங்கள் இருக்கும். இந்தியர்கள் காணும் சொர்க்கத்தில் உள்ள மரங்கள் மிகப் பெரியவை. அவற்றின் நிழலில் ஓராயிரம் மாட்டு வண்டிகள் வெயில் படாமல் நிற்கலாமாம்.
திபெத்தியர்களின் நரகம் பனிக்கட்டிகளால் ஆனது. இந்தியர்களின் நரகத்தில் எப்போதும் தகிக்கும் அக்னி எரிந்து கொண்டேயிருக்கும்.
எப்படி இவ்வளவு வகையான நரகங்களும், சொர்க்கங்களும் இருக்க முடியும்? இவை எல்லாம் நமது ஆசைகளின் வெளிப்பாடு. நாம் இந்த உலகத்தில் எதற்காக ஏங்குகிறோமோ அதை சொர்க்கத்தில் புறநிலைப்படுத்துகிறோம். அதை அங்கே அனுபவிக்க விழைகிறோம். நாம் எதற்கெல்லாம் இந்த உலகத்தில் பயப்படுகிறோமோ அதை வைத்துதான் நாம் நரகங்களைப் படைக்கிறோம்.
நரகம் நமக்கில்லை , மற்றவர்களுக்கு. அதாவது நமது மதத்தை, நமது கடவுள் கொள்கையை ஏற்க மறுக்கும் மற்றவர்களுக்குத்தான் நரகம். நமது கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சொர்க்கத்தை இந்த உலகில் நாம் ருசிக்கத் துடிக்கும் இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தைப் பரிசளிக்கிறோம்.
இதெல்லாம் மதத்தோடு சேர்த்தியில்லை.
இஸ்லாமியர்கள் காணும் சொர்க்கத்தில் மது ஆறு போல ஓடுகிறதாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் இந்த உலகத்தில் மது அருந்துவதைக் கண்டிகிறார்கள். அதைப் பாவம் என்று சொல்கிறார்கள். மது அருந்தும் பாவத்தை இங்கே செய்யாமல் இருந்தால், அந்த புனிதர்களுக்கு சொர்க்கத்தில் ஆறுபோல் ஓடும் மது கிடைக்குமாம்! கேலிக்கூத்தாக இல்லை?
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் காணும் சொர்க்கங்களில் ஓர் அடிப்படை ஒற்றுமை தெரிகிறது. சொர்க்கத்தில் அப்சரஸ்கள், மிக அழகிய பெண்கள் மிக அதிகமாக இருப்பார்களாம். எந்த நாடும், எந்த மதமும் தனது சொர்க்கத்தில் அழகான ஆண்களை வைப்பதில்லை. இது ஏன்?
இந்த நம்பிக்கைகளை உருவாக்குபவர்கள் ஆண்கள்தான். அதனால் அவர்கள் தங்களுக்குச் சாதகமாக அழகிய அப்சரஸ்களை’ ‘தேவகன்னிகளைரம்பா, ஊர்வசி, மேனகாவை உருவாக்கிவிட்டார்கள். பெண்கள் விடுதலை இயக்கங்கள் இன்னும் வலுப்பெற்றால் அவர்கள் பெண்களுக்குரிய சொர்க்கத்தை வர்ணிப்பார்கள்.
அப்போது அவர்கள் அழகான பெண்களைப் பற்றிப் பேசமாட்டார்கள். அழகான ஆண்களைப் பற்றிப் பேசுவார்கள். மனைவி சொல்லுக்கு அடங்கி நடக்கும் பயந்தாங்கொள்ளி கணவன்மார்கள், பெண்களின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னால் அடிமைகள் போல், வேலைக்காரர்கள் போல நடந்து செல்லும் ஆண்களைத்தான் அவர்கள் சொர்க்கத்தில் வைப்பார்கள். பெண்களை அப்படிதானே ஆண்கள் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்?
சொர்க்கத்தில் இருக்கும் பெண்கள் என்றும் இளமையாக இருப்பார்களாம். அவர்களுக்கு முதுமையே வராதாம்.
சரி, அதை விடுங்கள். இந்த மதங்கள் எல்லாம் கடவுளை எப்படி சித்தரிக்கன்றன தெரியுமா? வெண்தாடியுடன் கூடிய ஒரு வயதான மனிதனாக. கடவுளை எப்போதாவது நீங்கள் ஒரு துடிப்புள்ள இளைஞனாகக் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால் இளைஞர்களை நம்பமுடியாது என்று பலர் நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. பக்குவம் இருக்காது. முதிர்ச்சியிருக்காது. சில சமயங்களில் இளைஞர்கள் அசட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று இந்த சமுதாயம் நினைக்கிறது.
அதனால் தான் உலக மதங்கள், இறைவனை முழுக் கிழவனாகச் சித்தரிக்கின்றன. ஒரு புத்திசாலி மனிதன் கண்டிப்பாக வயதானவனாகத் தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவும் அனுபவமும் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்று உலகம் நினைக்கிறது. அதனால் கடவுள் தாடிக்காரக் கிழவனாகக் காட்சி தருகிறார்.
ஆனால், கடவுளைச் சுற்றி நிற்கும் தேவலோகப் பெண்கள் எல்லாம் இளங்குமரிகள். பதினெட்டு வயதுக்கு மேலே ஒரு நாள்கூட வயது ஏறாத நிரந்தரக் கன்னிகள். அந்த வயதில் அப்படியே தேங்கிவிட்ட அதிசயப் பிறவிகள். பாவம், எத்தனை கோடி ஆண்டுகளுக்குத்தான் அவர்கள் பதினெட்டு வயதுப் பெண்களாகவே இருப்பார்கள்!
ஆனால் இது உண்மையில்லை. மனிதனின் கற்பனை. நமது புனிதர்கள் பெண்களை வெறுக்கிறார்கள். உடலுறவை வெறுக்கிறார்கள். பிரம்மச்சரியத்தைப் புகழ்கிறார்கள். அப்படிச் செய்தால் அவர்களுக்கு மறுவுலக வாழக்கையில் இன்பம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது நம்முடைய உலக ஆசைகள். நமது ஆழ்மனதில் இருந்து வரும் ஆசைகள். அவற்றை ஒதுக்கித் தள்ள முடியாது. அந்த ஆசைகளை நேருக்கு நேர் சந்தித்து, அவற்றின் போக்கைக் கவனித்து எதிர் கொண்டால் ஒழிய அவற்றை வெல்ல முடியாது. ஆசைகளை உள்ளே அடக்கிவைத்து ஞானியானவர் யாரும் இல்லை.