my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

திங்கள், 19 செப்டம்பர், 2011

இருப்பு நிலைக்கு வர உதவும் தியான முறைகள்.


1.   நீ இருக்கிறாயா 

எப்போது எப்போதெல்லாம் தூக்கத்தை உணர்கிறாயோ அப்போது,
முதல் படி உன்னையே கேட்டுக் கொள்
நீ இங்கிருக்கிறாயா என உன்னையே நீ கேட்டுக்கொள். திடீரென உன் எண்ணங்கள் நிற்கும்.
இரண்டாவது படி   நீயே பதில் கூறு
ஆம் என பதில் கூறு. இது உன்னை கவனத்திற்குள் கொண்டுவரும். எண்ணங்கள் நின்றுவிடும்போது நீ கவனமடைவாய். இந்த கணத்தில் இருப்பாய்.
மூன்றாம் படி தூங்கப் போகும் போது கூட........
தூக்கத்தில் விழப் போகும்போது கூட திடீரென நீ இருக்கிறாயா என கேள். பதிலும் கூறு.
இருளில் நீ விழிப்புணர்வு ஜோதியாக மாறுவாய்.

மேலும் இது உன்னுடைய சொந்த இருப்பை நினைவு கொள்வதாகும். ஒவ்வொரு நாளும் காலையில் உனது வாழ்வில் சூரியன் உதிப்பதை, மலர்கள் மலர்வதை பார்க்க கிடைத்ததற்காக நன்றி கூறி, மதிப்பு தருவதாகும். தியான தன்மையுள்ள, மனதிலிருந்து செயல்படாத ஒரு மனிதன் வாழ்க்கை அவனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நன்றியோடு இருப்பான். நீ அதற்கு தகுதியானவனல்ல. யாருக்குமே தகுதியில்லை. ஆனாலும் காரணமேயின்றி வாழ்க்கை பரிசளிக்கிறது. உன்னுடைய வாழ்க்கையை மேலும் ஒரே ஒரு வினாடி கூட அதிகமாக கேட்க முடியாது. நான் தகுதியானவன், எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் சில வருடங்கள் எனக்குத் தாருங்கள் என கேட்க முடியாது. யாருக்கும் உரிமையில்லை. ஆனால் வாழ்க்கை அதனுடைய அளப்பரிய தன்மையினால் உன்மேல் வாழ்வைச் சொரிகிறது.

2.   நிறுத்து

எப்போது குறைந்தபட்சம் ஒருநாளில் 6 தடவை. அதிக பட்சம் எவ்வளவு வேண்டுமானாலும். ஆனால் திடீரெனத்தான் செய்யப்பட வேண்டும்.

தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, எதையாவது செய்து கொண்டிருக்கும் போது, திடீரென சுய உணர்வு வரும்போது, நிறுத்து முழுமையாக நிறுத்து, அசைவுகள் இன்றி இரு. என்ன நிகழ்கிறது என்ற உணர்வோடு இரு. பின் நகர ஆரம்பி.

திடீரென நீ தன்னிலை அடையும்போது, சக்தி முழுமையாக மாற்றமடைகிறது. மனதில் ஓடிக் கொண்டிருப்பது நின்று விடும். அவ்வளவு விரைவாக மனதால் உடனே வேறொரு சிந்தனையை உருவாக்க முடியாது. அதற்கு சிறிது நேரம் பிடிக்கும், மனம் முட்டாள் தனமானது, அதற்கு உடனே செயல்பட தெரியாது. அதனால் நீ திடீரென செய்யும்போது........ அந்த நிறுத்து எனும்போது மனம் நிற்கிறது, ஒரு வினாடி எல்லாமும் தெளிவாகிறது. எல்லா எண்ணங்களும் மறைந்து விடும் அங்கே வெறுமை. அந்த வெறுமையில் ஒரு தெளிவு. நிறுத்தும்போது அதை அதிக நேரம் செய்யாதே. ஏனெனில் அரை நிமிடத்தில் மனம் திரும்ப உயிர் பெற்று அந்த தெளிவை அழித்து விடும்.

மையம் கொள்ளுதல் அல்லது நிலை பெறுதல்.

3. ஹரா தியானம் அல்லது நாபி தியானம்

எப்போதெல்லாம் செய்வதற்கு எந்த வேலையும் இன்றி ஓய்வாக இருக்கிறாயோ அப்போதெல்லாம் அமைதியாக அமர்ந்து தொப்புளுக்கு இரண்டு விரற்கடை கீழே உள்ள இடத்திற்கு சென்று அங்கேயே இரு. இதுதான் ஹரா மையம், நாபிக்கமலம்.

இந்த மையத்தைக் குறித்து விழிப்புணர்வு கொள்வது உனக்கு பேருதவியாக இருக்கப் போகிறது. அதனால் அங்கே எவ்வளவு நேரம் தங்கி இருந்தாலும் அந்தளவு நல்லது. அது உனது வாழ்வுச் சக்திகளுக்கு ஒரு மகத்தான மையத்தை உருவாக்கும். நீ அதை வெறுமனே பார்க்க ஆரம்பித்தால் போதும், அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். அந்த மையத்தை சுற்றியே வாழ்க்கை சுழலுவதை நீ உணர ஆரம்பிப்பாய். ஹராவிலிருந்துதான் வாழ்க்கை ஆரம்பமாகிறது, அந்த ஹராவில்தான் வாழ்வு முடிகிறது. நமது உடலிலுள்ள மற்ற மையங்கள் எல்லாம் விலகி உள்ளன. நாபிக் கமலம் மட்டும் மிகச் சரியாக நடுவில் உள்ளது. அங்கேதான் நாம் வேர் கொண்டு நிலை பெறுகிறோம். அதனால் ஒருவர் அந்த மையத்தை பற்றி விழிப்புணர்வு கொண்டால் பல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

உதாரணமாக, எண்ணங்கள் குறையும், ஏனெனில் சக்தி தலைக்கு செல்வதில்லை, அது நாபிக்கு செல்கிறது.

நீ நாபியை பற்றி நினைக்க நினைக்க நீ நாபியில் நிலை பெற,பெற உன்னுள் ஒரு ஒழுங்கு வரும். அது வற்புறுத்தலால் வருவதல்ல, தானே இயற்கையாக வரும். உனக்கு நாபியை பற்றிய விழிப்புணர்வு அதிகமாகுமளவு வாழ்வையும் இறப்பையும் பற்றிய பயம் குறையும் ஏனெனில் இதுதான் பிறப்பு இறப்பின் மையம். ஒருமுறை நீ நாபி கமலத்துடன் லயப்பட்டு விட்டால், பின் வாழ்வை துணிச்சலுடன் வாழ முடியும். தைரியம் அதிலிருந்துதான் எழுகிறது. மேலும் நிதானமற்ற கணங்கள் குறைதல், எண்ணங்கள் குறைதல், அதிக மௌனம், இயல்பான ஒழுக்கம், துணிச்சல், நிலைபெற்றல், ஆழமாய் இருத்தல் ஆகியன நிகழும். 

தளர்த்திக்கொள்ளும் முறைகள்

4.   உன்னை ஏற்றுக் கொள்ளுதல்

நீ போட்டிக்கு நடுவே வாழ்கிறாய். அது பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. நீ இடைவிடாது ஒப்பிட்ட படியே வாழ்கிறாய். அது பதட்டத்தை உண்டாக்குகிறது.
நீ ஒன்று இறந்தகாலத்தை பற்றி நினைக்கிறாய், அல்லது எதிர்காலத்தை பற்றி நினைக்கிறாய். அதனால் நிகழ்காலத்தை தவற விடுகிறாய். ஆனால் இதுதான் இருக்கும் ஒரே உண்மை. இது பதட்டத்தை உண்டாக்குகிறது.

உன்னுடைய திறமையைகண்டுகொள். இயற்கை யாரையும் தனிப்பட்ட திறமையை பரிசாக அளிக்காமல் பூமிக்கு அனுப்புவதில்லை, ஒரு சிறிய தேடல்தான் தேவை....... உன்னுடைய குணங்களை, உன்னிடமுள்ள தனிப்பட்ட திறமையைக் கண்டு பிடித்து அவற்றை முழுமையாக உபயோகப்படுத்து. பதட்டத்தில் குவிந்திருந்த சக்திகள் எல்லாம் உன்னுடைய மேன்மையாக, உன்னுடைய அழகாக மிளிர ஆரம்பிக்கும்.   

5.   ஒரு இறகு தொடுவதை போல தொடுதல்

ஒரு நாளைக்கு பல முறை செய்யவும்.

ஒரு வினாடி உணர்தல் கூட நல்லதுதான்.
ஆனால் தியானமாக செய்ய 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

முதல் படி ஒரு நாற்காலியில் அல்லது ரயிலில் அல்லது வேறு எங்கோ தளர்வாக உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி உள்ளங்கையை கண்களின் கருவிழிமேல் மெதுவாக அழுத்தாமல் இறகு தொடுவதைப்போல வைக்க வேண்டும்.

ஒரு ஓய்வான மனதில் எண்ணங்கள் ஓடாது, அவை உறைந்து விடும். அவை பதட்டத்தின் மூலம்தான் உயிர் வாழ்கின்றன. அதனால்தான் கண்கள் அசைவற்று நிலை பெற்ற நிலையில் சக்தி உள் நோக்கி செல்கையில், எண்ணங்கள் நின்றுவிடுகின்றன. நீ உள்மனதில் அளவற்ற சந்தோஷத்தை உணர்வாய். நாள்தோறும் செய்ய செய்ய அந்த சந்தோஷம் ஆழமாகும்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஓஷோ கதைகள்


ஒரு பிரபலமான வக்கீல்,வாதத் திறமை மிக்கவர்.அவர் ஒரு பெரும் பணக்காரருக்காக  ஒரு கேசில் ஆஜரானார்.இந்த வக்கீல் பெரும் குடிகாரர்.பணக்காரரின் கேஸ் கோர்ட்டில் இறுதிக் கட்டத்துக்கு வந்தது.அன்று வக்கீல் தன் வாதத் திறமையைக் காட்ட வேண்டிய நாள்.ஆனால் முந்திய இரவு மிக அதிகமாகக் குடித்திருந்ததால் கோர்ட்டிற்கு தள்ளாடிக் கொண்டே வந்தார்.குடி வெறியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல்,வாதத்தின்போது அவர் பணக்காரருக்கு எதிரான வலுவான வாதங்களை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.பணக்காரர் அழ ஆரம்பித்துவிட்டார்.வக்கீலின் உதவியாளர்கள் சைகைகள் மூலம் எவ்வளவோ சொல்லியும் வக்கீல் கண்டுகொள்ளவில்லை.மதிய உணவு இடைவேளை வந்தது.பணக்காரரும் வக்கீலின் உதவியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.அவருக்கு அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுவந்தது.நடந்த தவறைப் புரிந்து கொண்ட அவர்,பணக்காரரிடம் ஒன்றும் பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.கோர்ட் மீண்டும் கூடியது.வக்கீல்வாதாட ஆரம்பித்தார்,”கணம் கோர்ட்டார் அவர்களே,காலையில் நான் உங்கள் முன் வைத்த விவாதங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய எதிர்த்தரப்பு வக்கீல் உங்கள் முன் வைக்கக்கூடிய வாதங்களாகும்.இப்போது நான் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும்.என்றுகூறிவிட்டு ஆனித்தரமாக பணக்காரருக்கு சாதகமாக, காலையில் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் மாற்றுக் கருத்தை முன் வைத்தார்.அவர் வாதம் முடிந்தவுடன் நீதிபதி,எதிர்த்தரப்பு  வக்கீலை  அழைத்தார்.அவரோ,’நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் அவரே சொல்லி பதிலும் சொல்லிவிட்டார்.இதில் நான் பேசே என்ன இருக்கிறது?’என்று கூறி அமர்ந்துவிட்டார்.கேஸ் பணக்காரருக்கு சாதகமாக முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

சூபி ஞானியான ஜுன்னேய்த்தின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர்,ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது,தூரத்தில்,ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு  இஸ்லாமியப்பெண் அமர்ந்து,மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒருஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான்.அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே  அழைத்தார்.அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.அப்பெண் அவரதுதாயார்.ஜுன்னேய்த் கூறினார்,”நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியுமா?இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான தண்ணீர்.மது அல்ல.புட்டி மட்டும் மது இருந்த புட்டி.சீடன் மன்னிக்கும்படி அவர்காலில் விழுந்தான்.ஜுன்னேய்த்  கூறினார்,”இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம்.உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி   ஏற்படுத்தப்பட்டது.நீ பிற சீடர்களைப்போல  நடக்க முயற்சிக்கிறாய்.கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ,எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.உனது அன்பு ஒரு முயற்சி.உண்மையான அன்பு ஒரு முயற்சியாக இருக்க முடியாது.  நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது.இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.

ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,”நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.அவருக்கு ஒரே வியப்பு.ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,”வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை.எனக்கு எப்படி சொர்க்கம்…?”அவர்கள் சொன்னார்கள்,”வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய்.அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம்.இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது.இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம்.பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள்.உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய்.அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.
மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான்.இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.