my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வியாழன், 1 செப்டம்பர், 2011

ஓஷோ பேசுகிறார் – 2


அன்பு எப்போதும் உங்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும். காரணம் நமது வளர்ப்பு முறை. நமக்கு வெறுப்பை உமிழச் சொல்லித்தந்தார்களே தவிர, அன்பைக் காட்டச் சொல்லித் தரவில்லை. நமக்கு உருவேற்றப்பட்ட மனக்கட்டுத்திட்டங்கள் அன்புக்கு எதிரானவை. ஆனால் அவர்களின் சூழ்ச்சி மிகவும் நுட்பமானது. ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த சூழ்ச்சி புரியும். நமக்கு வெறுப்பைக் காட்டத்தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம்.
இந்து முகமதியனை வெறுக்கிறான். முகமதியன் கிறிஸ்துவனை வெறுக்கிறான். கிறிஸ்துவனோ யூதனை வெறுக்கிறான். ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை வெறுக்கிறது. ஆத்திகன் நாத்திகனை வெறுக்கிறான். நாத்திகன் ஆத்திகனை வெறுக்கிறான். அரசியல் கொள்கைகள் எல்லாம் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.
கம்யூனிஸ்டுகள் ஃபாசிஸ்டுகளை வெறுக்கிறார்கள். ஃபாசிஸ்டுகள் சோஷலிசவாதிகளை எதிர்க்கிறார்கள். எல்லா நாடுகளும் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை வெறுக்கிறது. உலகம் முழுவதும் வெறுப்பு நிறைந்திருக்கிறது.
உங்கள் இரத்தம், உங்கள் எலும்பு, அதனுள் இருக்கும் மஜ்ஜை வரையில் இந்த வெறுப்பு பரவியிருக்கிறது. சில நேரங்களில் நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் எதையாவது எதிர்த்துத்தான் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்று சேர்வார்கள். நமது ஒற்றுமைக்குக்கூட ஒரு பொது எதிரி தேவை. ஆதனால் அந்தச் சேர்க்கை அன்பில் அடிப்படையில் விளைந்தது அல்ல. ஒரு பொது எதிரியின் மேல் உள்ள வெறுப்பின் அடிப்படையில் விளைந்தது.
இந்த மனோதத்துவம் ஹிட்லருக்கு நன்றாகத் தெரியும். அவன் தனது சுயசரிதையில் எழுதுகிறான்… ‘அன்பால் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதில்லை. அன்புக்கு அந்தச் சக்தி கிடையாது. வெறுப்புணர்வுதான் சக்தி மிக்கது. வெறுப்பை உண்டாக்குங்கள் மக்கள் ஒன்று சேர்வார்கள்.என்னால் ஹிட்லரின் அறிவைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவன் பைத்தியக்காரனாக இருந்திருக்கலாம். சில சமயம் பைத்தியக்காரர்களுக்கு அதீதமான உட்பார்வை இருப்பதுண்டு. ஒரு கூட்டத்தின் மனப்பாங்கு எப்படி இருக்கும் என்பதை ஹிட்லர் புட்டுப் புட்டு வைத்துவிட்டான்
முகமதியர்கள் தாக்குவார்கள் என்ற பயம் இருந்தால் இந்துக்கள் ஒன்று சேர்வார்கள். இந்துக்கள் மேல் பயம் இருந்தால்தான் முகமதியர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். பாகிஸ்தான் படையெடுக்கப் போகிறது என்று செய்தி வந்தால்தான் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.
அந்தக் காலத்தில் ரஷியா அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் செய்து குவித்துக் கொண்டிருந்தது. காரணம் அமெரிக்கா தன்னைத் தாக்குமோ என்ற பயம்தான். அதே போல், ரஷ்யாவின் மேல் ஏற்பட்ட பயத்தால் அமெரிக்கா அழிவு ஆயுதங்களை சேகரித்துக் கொண்டிருந்தது. மொத்த உலகமே பயத்திலும், வெறுப்பிலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அன்பை ஒத்துமொத்தமாக அழித்துவிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக, பல ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் அன்பில் விஷத்தைச் செலுத்திவிட்டார்கள். அதனைச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள். அதனால் எப்போதெல்லாம் உங்கள் மனதில் அன்பு தோன்றுகிறதோ அப்போது உங்களிடம் உள்ள மனக்கட்டுத்திட்டம் அதனை மூர்க்கமாக எதிர்க்கிறது.
மனிதனுக்கு ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். அன்புதான் மனிதனின் அடிப்படைக் குணம். அன்பில்லாமல் யாரும் வளர முடியாது, மலர முடியாது, நிறைவு காண முடியாது, திருப்தியுடன் வாழ முடியாது. அன்பில்லாமல் கடவுளே இல்லை. அன்பின் அனுபவத்தின் உச்சக்கட்டம்தான் கடவுள்.
உங்கள் அன்பு போலியாக இருப்பதால் உங்களால் போலியான அன்பைத்தான் சமாளிக்க முடியும் என்பதால் உங்கள் கடவுளும் ஒரு போலிதான்.
கிறிஸ்துவர்களின் கடவுள், இந்துக்களின் கடவுள், யூதர்களின் கடவுள் எல்லாருமே போலிகள் தான்.
கடவுள் எப்படி இந்துவாக, கிறிஸ்துவாக, முகமதியராக, யூதராக இருக்க முடியும்? அன்புக்கு மதச்சாயம் பூச முடியுமா? அன்பிலே இந்து-அன்பு, முகமதிய-அன்பு, யூத-அன்பு, கிறிஸ்துவ-அன்பு என்ற பாகுபாடுகள் இருக்க முடியுமா என்ன? இந்த பூமியே ஒரு பெரிய திறந்த வெளி பைத்தியக்கார ஆஸ்பத்திரியைப் போல் செயல்படுகிறது.
எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ‘எனக்கு பயமே வரக்கூடாதுஎன்று நீங்கள் நினைத்தால் இந்த பொம்மைகளையும் போலிகளையும் வைத்துக் கொண்டு காலம் முழுவதும் விளையாடிக் கொண்டிருங்கள். மெய்யான அன்பும், மெய்யான கடவுளும் உங்களுக்குரியன அல்ல.
ஆனால் நீங்கள் இங்கே என்னிடம் வரும் போது இந்த பொம்மைகளையும், போலிகளையும் தூக்கியெறிய வேண்டும். என்னுடைய வேலையே இதுதான். எல்லா பொம்மைகளையும் அழிப்பது. நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள் என்பதை உங்களுக்கு உணரவைப்பது. உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. இன்னும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பது. வளர்ந்தபின் குழந்தைக்குறிய அறிவுடன் செயல்படுவதைப் போன்ற அசிங்கம் வேறு எதுவும் இல்லை. குழந்தைப் போல் வெகுளித்தனமாக இருப்பது என்பது வேறு. குழந்தையைப் போல் பக்குவமில்லாமல், குழந்தை-அறிவுடன் இருப்பது என்பது வேறு. முன்னது ஒரு வரப்பிரசாதம். பின்னது ஓர் ஊனம். முப்பது வயதில் நீங்கள் காகிதக் கப்பலுடனும், யானைப் பொம்மையுடனும் விளையாடிக் கொண்டிருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்?
மிகவும் அழகான பிரபஞ்ச இருப்பு நிலை உங்களை நாலாபக்கங்களிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த அழகு உங்களை இருந்த இடத்திலேயே நடனம் ஆட வைக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நீங்கள் இறந்தவருக்குச் சமமாகி விடுவீர்கள். நீங்கள் ஏற்கனவே இறந்திருக்க வேண்டும். கல்லறையில் இருக்க வேண்டிய ஆசாமி. தவறுதலாக வெளியே இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக