my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஓஷோ கதைகள்


ஒரு பிரபலமான வக்கீல்,வாதத் திறமை மிக்கவர்.அவர் ஒரு பெரும் பணக்காரருக்காக  ஒரு கேசில் ஆஜரானார்.இந்த வக்கீல் பெரும் குடிகாரர்.பணக்காரரின் கேஸ் கோர்ட்டில் இறுதிக் கட்டத்துக்கு வந்தது.அன்று வக்கீல் தன் வாதத் திறமையைக் காட்ட வேண்டிய நாள்.ஆனால் முந்திய இரவு மிக அதிகமாகக் குடித்திருந்ததால் கோர்ட்டிற்கு தள்ளாடிக் கொண்டே வந்தார்.குடி வெறியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல்,வாதத்தின்போது அவர் பணக்காரருக்கு எதிரான வலுவான வாதங்களை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.பணக்காரர் அழ ஆரம்பித்துவிட்டார்.வக்கீலின் உதவியாளர்கள் சைகைகள் மூலம் எவ்வளவோ சொல்லியும் வக்கீல் கண்டுகொள்ளவில்லை.மதிய உணவு இடைவேளை வந்தது.பணக்காரரும் வக்கீலின் உதவியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.அவருக்கு அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுவந்தது.நடந்த தவறைப் புரிந்து கொண்ட அவர்,பணக்காரரிடம் ஒன்றும் பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.கோர்ட் மீண்டும் கூடியது.வக்கீல்வாதாட ஆரம்பித்தார்,”கணம் கோர்ட்டார் அவர்களே,காலையில் நான் உங்கள் முன் வைத்த விவாதங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய எதிர்த்தரப்பு வக்கீல் உங்கள் முன் வைக்கக்கூடிய வாதங்களாகும்.இப்போது நான் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும்.என்றுகூறிவிட்டு ஆனித்தரமாக பணக்காரருக்கு சாதகமாக, காலையில் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் மாற்றுக் கருத்தை முன் வைத்தார்.அவர் வாதம் முடிந்தவுடன் நீதிபதி,எதிர்த்தரப்பு  வக்கீலை  அழைத்தார்.அவரோ,’நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் அவரே சொல்லி பதிலும் சொல்லிவிட்டார்.இதில் நான் பேசே என்ன இருக்கிறது?’என்று கூறி அமர்ந்துவிட்டார்.கேஸ் பணக்காரருக்கு சாதகமாக முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

சூபி ஞானியான ஜுன்னேய்த்தின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர்,ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது,தூரத்தில்,ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு  இஸ்லாமியப்பெண் அமர்ந்து,மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒருஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான்.அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே  அழைத்தார்.அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.அப்பெண் அவரதுதாயார்.ஜுன்னேய்த் கூறினார்,”நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியுமா?இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான தண்ணீர்.மது அல்ல.புட்டி மட்டும் மது இருந்த புட்டி.சீடன் மன்னிக்கும்படி அவர்காலில் விழுந்தான்.ஜுன்னேய்த்  கூறினார்,”இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம்.உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி   ஏற்படுத்தப்பட்டது.நீ பிற சீடர்களைப்போல  நடக்க முயற்சிக்கிறாய்.கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ,எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.உனது அன்பு ஒரு முயற்சி.உண்மையான அன்பு ஒரு முயற்சியாக இருக்க முடியாது.  நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது.இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.

ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,”நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.அவருக்கு ஒரே வியப்பு.ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,”வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை.எனக்கு எப்படி சொர்க்கம்…?”அவர்கள் சொன்னார்கள்,”வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய்.அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம்.இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது.இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம்.பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள்.உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய்.அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.
மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான்.இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக