my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வியாழன், 25 ஜூலை, 2013

படைப்பு பற்றி ஓஷோவின் கருத்து



படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதையுமே உதாசீனப் படுத்த முடியாது. ஒரு மனிதன் உணர்ச்சியற்றவனாக இருக்கும் பட்சத்தில் அவனிடமுள்ள ஆக்கும் திறமை மறைந்தொழிந்து போய்விடுகிறது. படைப்பாளிக்கு தேவை உயிர்ப்பு (aliveness), சக்தி (energy), பற்றுதல்(passion). உருகியொழுகி ஓடும் - ஒருமுகப்படுத்தப் பட்ட வாழ்வின் மீதான காதலுடன் - பாய்ந்து ஓடும் நதியைப் போல ஆற்றலுடன், ஒடுவது தான் படைப்பு.

உங்களின் பார்வை உதாசீனப் படுத்தும் நோக்கிலிருந்தால், அழகு உங்கள் கண்களுக்குத் தெரியாது. உதாசீனப் போக்கு, வாழ்வில் கிடைக்கும் அனைத்தையுமே சாதாரணமாக்கிவிடும். உ-ம் - உங்கள் வேலை; தொழில். இதென்ன பெரிய வேலை என்ற அலட்சியம் உங்கள் நோக்கில் இருக்கும் பொழுது, அந்த வேலை - தொழில் உங்களுக்கு எந்த ஈர்ப்பையும், ஆர்வத்தையும் தராது. வேலை என்ற இடத்தில், வாழ்க்கை என்ற வார்த்தையை இட்டுப் பாருங்கள். இப்பொழுது, புரியும், மனிதர்கள் எதனால், தங்களுக்குள் வாழ்வின் ஆதர்சனமான வெப்பத்தை இழந்து, குளிர்ந்து குறுகிப் போய்விடுகிறார்கள் என்று.

இந்த விபத்து கிழக்கே நிகழ்ந்தது. மதங்கள் ஆசாரம் என்ற பெயரில் தவறான பாதையில், தவறான வழிகாட்டுதலுடன் நடை போட ஆரம்பித்தது. பற்றுதலுடன் வாழ்வை நோக்குவது தவறு என்ற கருத்தில் மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டது (conditioned); பயிற்றுவிக்கப் பட்டது (trained). 

ஒருமுறை ஓஷோவைப் பார்க்க ஒரு துறவி வருகை தந்தார். அப்பொழுது ஓஷோ, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பல மலர்கள் தோட்டத்தில் மலர்ந்திருந்தன. துறவியின் பார்வையில் அசூயை. அவர் ஒஷோவிடம் கேட்டார் - "இந்த மலர்களை நீங்கள் விரும்புகிறீர்களா? தோட்ட வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" அவருடைய தொனியில் கண்டனம். துறவறத்தில் ஈடுபட்டவர்கள், வாழ்வை இரசிக்கும் காரியங்களில் பற்றுதல் செய்யக் கூடாது என்ற தொனி இருந்தது.

நான் புறக்கணிப்பவனில்லை. புறக்கணிப்பு என்பது எதிர்மறை நடை. தற்கொலை செய்து கொள்ளும் மனம் கொண்டவனின் செயல். உதாசீனம் செய்பவனை எதுவும் பாதிக்காது. அவன் தன் வாழ்க்கையை புறக்கணிப்பு என்ற பிரச்னைகளை தவிர்க்கும், தப்பித்து ஓடும் வழியில் நடத்திச் செல்கிறான். எதுவுமே - எந்த ஒரு நிகழ்வுமே - அவனை அதிரச் செய்யாது; கவனத்தைப் பிசகச் செய்யாது. எதற்குமே அசைந்து கொடுக்காத நிலை தேவையில்லை. மனம் இந்நிலையில் எப்பொழுதுமே மகிழ்ச்சியையும், பொங்கி வழியும் ஆற்றலையும் பெறாது.

புறக்கணிப்பை, மக்கள், மதங்கள் பரிந்துரைக்கும் வாழ்வுமுறையாக - பயணம் செல்லும் பாதையாகத் தேர்வு செய்து விட்டனர் - பயணிக்க முடிகிறதோ இல்லையோ! முடிந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகவும், சாதித்தவர்களாகவும் கொண்டாடப் பட்டார்கள். அவர்கள் எதை சாதித்தார்கள்? வாழ்வின் நேசமான பகுதிகளை, பிற மனிதர்களைப் பற்றுதலோடு நோக்கும் பண்பை இழந்து, விதைத்தது முளைத்தது என்ற கணக்கில் வாழ்ந்து, பிரச்னைகளைச் சந்திக்கும் முயற்சியை விடுத்து ஓடிய வாழ்வா கொண்டாடப் பட வேண்டியது? 

சாதிப்பது, நிகழ்த்திக் காட்டுவது, பரிபூரணமாக உணர்வது இவையே இயற்கையுடன் ஒன்றிய நேர்முறை வழிமுறை (Positive attidue). கடவுள் இதற்கு ஒரு நல்ல முன்மாதிரி. அவன் துறவறம் பூண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தையும், கோள்களையும், துணகளையும், விலங்குகளையும், பறவைகளையும், புழுக்களையும், பூச்சிகளையும், இன்னபிறவற்றையும் படைத்திருக்க முடியுமா? பச்சைக்கிளியின் வண்ணம் தான் எத்தனை அழகு? உணர்ச்சியற்ற ஜடமாக இறைவன் இருந்திருந்தால், இத்தனை ரசிப்புடன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க முடியுமா? ஒவ்வொரு படைப்பிலும் உயிர்ப்புடன், ரசனையுடன், பற்றுதலுடன் செய்த இறைவனை பற்றற்ற வாழ்வுமுறைப் பாதையில் சென்றடைய முடியுமா? காந்தியைப் படைத்த அதே அக்கறையுடன் தான், அவன் ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகுகளில் வண்ணம் தெளிவித்தான்.

இறைவன் அன்பானவன்.(LOVE). இறைவன் முழுமையானவன். அந்த முழுமையில் ஒன்றாகிப் போக நீங்கள் விரும்புவீர்களேயானால், நீங்களும் காதலில் ஈடுபடுங்கள். அன்பு செய்தலில்). அதை விடுத்து, விரதமிருந்து, பற்றுதலைப் போக்கி, இறைவனை நோக்கி செல்வோமென்பது சுயமாக மெல்லச் சாகும் வழியாகும். 

காதல் செய்யுங்கள்; ஆழ்ந்த காதல் செய்யுங்கள்; முழுமையாக உங்கள் காதலில் மூழ்குங்கள்; அந்தக் காதலிலே உள்ளமும் உடலும் கரைந்து செல்லும் அளவிற்குக் காதல் செய்யுங்கள் - அப்பழுக்கற்ற படைக்கும் சக்தியாக வழிந்தோடும் நிலை எய்துங்கள்; அந்த நிலையில் தான் உங்களால் கடவுளின் உயிர்ப்பு சக்தியில் பங்கேற்றுக் கொள்ளவும், கடவுளுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்து செல்லவும் இயலும்.

எனக்கு படைப்பு என்பது - பிரார்த்தனை; தியானம்; அதுவே வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக