my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

திங்கள், 4 ஜூன், 2012

ஜென் குருவின் அமைதி


ஜென் குரு பொகுஜு தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் வேகமாக வந்து ஒரு மரக் கட்டையால் அவரைத் தாக்கினான்.அதே சமயம் அவன் தடுமாறி கீழே விழுந்தான்.கட்டையும் கீழே விழுந்தது.குரு உடனே கட்டையைத் தன கையில் எடுத்தார்.அதைப் பார்த்த உடன் அவன் பயந்து ஓட ஆரம்பித்தான்.குருவும் கட்டையுடன் அவனைப் பின் தொடர்ந்தார்.அவனைப் பிடித்து,''இதோ உன் கட்டை,''என்று கூறி  அவன் கையில் கட்டையைத் திரும்பக் கொடுத்தார்.அவன் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.அங்கிருந்த மக்கள் குருவிடம்,''இவன் ஒரு அயோக்கியன்.இவனைப் பதிலுக்கு அடிக்காமல் கட்டையை அவனிடம் திரும்பக் கொடுக்கிறீர்களே!''என்று கேட்டனர்.குரு கேட்டார் ,''நாம் செல்கிற வழியில் மரத்திலிருந்து ஒரு கிளை முறிந்து நம் மீது விழுந்தால் என்ன செய்வோம்?என்ன செய்ய முடியும்?''மக்கள் அவர் கூற்றை ஏற்காமல்,''கிளை காய்ந்து போனது.அதற்கு உயிர் இல்லை.அதற்கு அறிவுரை கூற முடியாது.அதற்கு தண்டனையும் கொடுக்க முடியாது.அதற்கு மனம் என்று ஒன்று இல்லை.எனவே அதனுடன் ஒப்பிடாமல் இவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.''என்றனர்.குரு ,''என்னைப் பொறுத்த வரை இவன் ஒரு முறிந்த கிளைதான்.என்னால் ஒரு கிளைக்கு ஆலோசனை வழங்கவோ,தண்டனையோ கொடுக்க முடியாது எனில் இவனுக்கு மட்டும் ஏன் வீணே ஆலோசனை கூறவோ,தண்டனை கொடுக்கவோ வேண்டும்?''என்று கூறிக் கொண்டே தன் வழியில் நடந்து சென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக