my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

புதன், 13 ஜூலை, 2011

பயணம் – ஓஷோ கதைகள்

:
 நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். அது திபெத்தில் நிகழ்ந்தது. வெகு தூரத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சேவை செய்து கொண்டிருந்த லாமா ஒருவர் தனது தலைமையகத்திற்கு மேலும் ஒரு லாமா தேவை என்று தகவலனுப்பினார். மேலும் அவரை இங்கு அனுப்புங்கள் என்றும் கேட்டிருந்தார்.

தலைமை மடாலயத்தின் மதகுரு எல்லா சீடர்களையும் கூப்பிட்டு அனுப்பி இந்த கடிதத்தை படித்து காண்பித்துவிட்டு அவர்களிடம் நான் உங்களில் ஐந்து பேரை அனுப்ப போகிறேன் என்றார்.

ஒரு லாமா, ஆனால் அவர் ஒருவரை தானே அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார் ஏன் ஐந்து பேரை அனுப்ப வேண்டும் என்று கேட்டார்.
வயதான தலைமை குரு ஏனென்று உனக்கு பின்னால் தெரியும். நான் ஐந்து பேரை அனுப்பப் போகிறேன், ஆனாலும் ஒருவராவது சென்று சேர்வது நிச்சயமில்லை. ஏனெனில் வழி மிகவும் நீண்டது, மற்றும் ஆயிரத்தோரு தடைகள் வரும். என்று கூறினார்.

எல்லோரும் சிரித்தனர். இந்த வயதான மனிதனுக்கு மூளை குழம்பிவிட்டது. ஒரே ஒருவர் தேவைபடும் இடத்திற்கு ஏன் ஐந்து பேரை அனுப்ப வேண்டும் என்று கேட்டனர். ஆயினும் அவர் வற்புறுத்தியதால் ஐவர் பயணத்திற்கு தயாராயினர்.

அடுத்த நாள் காலை அவர்கள் ஒரு கிராமத்தை கடக்கும்போது ஒரு அறிவிப்பாளன் அந்த கிராமத்தின் தலைமையிடம் இருந்து செய்தி கொண்டு வந்தான். எங்களது குரு இறந்துவிட்டார். எனவே எங்களுக்கு ஒரு குரு தேவை. நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினான்.

அந்த கிராமம் நல்ல செழிப்பானதாகவும் வளமானதாகவும் தோன்றியது. அதனால் அந்த ஐந்து பேரில் ஒருவர் நான் இங்கேயே தங்க விரும்புகிறேன். ஏனெனில் இதுவும் புத்தரின் வேலைதான். ஏன் பள்ளத்தாக்கு வரை செல்ல வேண்டும். இங்கேயும் நான் அதே வேலையைதான் செய்யப் போகிறேன். நீங்கள் நால்வரும் போங்கள் நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்றார். ஒருவர் குறைந்துவிட்டார்.

அடுத்தநாள் அவர்கள் ஒரு நகரத்தின் வெளிப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நகரத்தின் அரசன் அந்த வழியே தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். அந்த நான்கு பேரில் ஒரு துறவி மிகவும் ஆரோக்கியமானவராகவும் தேஜஸ் பொருந்தியவராகவும் அழகானவராகவும் இருந்தார். உடனே அரசன் நில்லுங்கள். நான் என் பெண்ணிற்கு ஒரு இளைஞனை தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் மிகப் பொருத்தமானவராக தோன்றுகிறீர்கள். எனக்கு ஒரே ஒரு மகள்தான். அவளை திருமணம் செய்து கொண்டு இந்த அரசையும் ஏற்றுக் கொள்ளுங்கள். என்றான்.
இயல்பாகவே அந்த இளம்துறவி தனது சக பயணிகளிடம் போய்வருகிறேன் என்று கூறி விடைபெற்றுக் கொண்டான். அவனும் போய்விட்டான். இரண்டாவது ஆளும் சென்று விட்டான்.

இப்போது இருந்த மூன்று பேருக்கும் அந்த வயதான குரு அறிவு கெட்டவரல்ல என்பது புரிந்தது. வழி மிகவும் நீண்டது, மேலும் ஆயிரத்தோரு தடைகள் என்பது புரிந்தது.

இப்போது மூவரும் நாம் இதுபோன்ற ஒரு போதும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டனர். ஒருவர் அரசராகவும் மற்றொருவர் மிகப் பெரிய குருவாகவும் ஆனதில் அடிமனதில் பொறாமை இருந்தது. என்னதான் நடக்கப் போகிறது இந்த பள்ளத்தாக்கில் என்று எண்ணினர்.

மூன்றாவது நாள் அவர்கள் வழியை தவற விட்டுவிட்டனர். தூரத்தில் மலைஉச்சியில் ஒரே ஒரு விளக்கு வெளிச்சம் தெரிந்தது. எப்படியோ தட்டுதடுமாறி அந்த விளக்கு வெளிச்சத்தை அடைந்தனர். அது ஒரு வீடு. அங்கே ஒரேஒரு இளம் பெண் இருந்தாள். அவள் இவர்களை பார்த்தவுடன் நீங்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் போலத் தெரிகிறீர்கள். எனது தாயும் தந்தையும் வெளியே சென்றவர்கள் இன்னேரம் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வரவில்லை. எனக்கு தனியாக இருக்க பயமாக இருந்தது. தெய்வம் அனுப்பிய தூதுவர்கள் போல நீங்கள் வந்து விட்டீர்கள். மிகவும் நன்றி. புத்தர்தான் உங்களை அனுப்பி இருக்க வேண்டும். எனது தாய்தந்தை வரும்வரை நீங்கள் என்னுடன் இருங்கள் எனக்கு பயமாக இருக்கிறது என்று கேட்டுக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை இவர்கள் கிளம்ப வேண்டும். ஆனால் இவர்களில் ஒருவர் - அந்த பெண்ணுடன் ஆழமாக காதலில் விழுந்து விட இவளுடைய பெற்றோர் வரும்வரை நான் வர முடியாது. அது முறையல்ல என்று கூறி வர மறுத்தார். முறையல்ல என்பதல்ல விஷயம், பிடிப்புதான் விஷயம். ஆனால் பிடிப்பு அங்கிருக்கும்போது மக்கள் முறையை பற்றி பேசுகின்றனர்.
மற்ற இருவரும் இது சரியல்ல. நாம் சென்றடையப் போகிறோம். நீ வரவில்லை. மேலும் நாம் இதுபோல செய்வதில்லை என்று நாம் முடிவு செய்தோம் அல்லவா என்று கேட்டனர்.

அதற்கு அவன், நான் வாழ்க்கை முழுவதும் கருணையைப் பற்றியே கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த பெண் தனியாக இருக்கிறாள். இவளது பெற்றோர் இன்னும் வரவில்லை. இப்படி விட்டுவிட்டு போவது நல்லதல்ல. இது கெடுதலாகலாம். புத்தர் என்னை மன்னிக்கவே மாட்டார். நீங்கள் போகலாம். நான் இங்கே தங்கப் போகிறேன் என்றான். உண்மையில் அவன் இவர்கள் சென்றுவிட வேண்டும் என விரும்பினான். மூன்றாவது நபரும் விடுபட்டு விட்டார்.

அடுத்த நாள் வழியில் ஒரு கிராமத்தில் இவர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டனர். அந்த கிராமத்து மக்கள் ஆத்திகர்கள். அவர்கள் புத்தரை நம்புவதில்லை. அந்த கிராமத்தில் இருந்த ஒரு மிகப் பெரிய பண்டிதர் ஒருவர் இவர்களை பார்த்து புத்தர் கூறியது உண்மை என்று நிரூபியுங்கள் என்று சவால் விட்டார்.

அவர்களில் ஒருவர் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். மற்றொருவர் நீ என்ன செய்கிறாய் இதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ யாருக்குத் தெரியும் நாம் செல்ல வேண்டுமே என்று கேட்டார்.

அதற்கு அவர், எனது முழு வாழ்வும் போனாலும் சரி, நான் புத்தரின் சீடன். இந்த மனிதன் புத்தரையும் அவரது கொள்கைகளையும் சவால் விடுகிறான். என்று கூறினான். உண்மையில் அது புத்தருக்கான சவால் அல்ல. அது இவனது ஆணவத்துக்கான சவால். நான் வரவில்லை, நான் இந்த கிராமத்தை விட்டு வரமுடியாது. நான் இந்த கிராமம் முழுமையையும் மாற்றப் போகிறேன். நீ போகலாம். உண்மையில் அங்கு ஒருவர் மட்டும் தானே தேவை. என்று கூறினார்.

இப்படித்தான் அது நிகழ்ந்தது. இந்த மனிதன் தர்க்கம் செய்வதற்காக இங்கே நின்று விட்டான். ஒரே ஒருவர் மட்டும் போய் சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக